தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தை திமுக உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது: எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): திமுகவும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உறுதியாக எதிர்க்கின்றன. காலை உணவுத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சொந்த பட்டா உள்ள நிலத்தில் பள்ளிவாசல், தேவாலயம் கட்டுவதற்கு சில முட்டுக்கட்டைகள் உள்ளன. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செவிலியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். போராடிகொண்டிருக்கிற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியத்தை வழங்க வேண்டும்.
மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மக்களை மதரீதியாகபிளவுபடுத்தி, அரசியலில் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. அச்சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியாது என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதி. சமீபத்தில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு பக்கமும், மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கழிவுப்பொருட்கள் கலந்துள்ளன. தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குளங்களையும் குறைந்தபட்சம் மூன்று அடி தூர்வார வேண்டும்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: புயல், மழை சீரமைப்பு பணிகளுக்கு தென்மாவட்டங்களுக்கு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுஉள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
நயினார் நாகேந்திரன்: திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வருவதற்கு எவ்வளவு பேருந்து கட்டணம் கொடுக்கிறார்களோ, அதே கட்டணத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வருவதற்கு கொடுக்க வேண்டியுள்ளது. பிராட்வேயில் இருந்து கோயம்பேட்டுக்கு சென்றோம். இப்போது, கிளாம்பாக்கத்துக்கு சென்றுள்ளோம். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து செங்கல்பட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரலாம். இது மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப ஏற்படும் சூழ்நிலை. இதைத் தவிர்க்க முடியாது. தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்றிவிட்டால், குறைவான நேரத்தில் திருச்சிக்கு வந்துவிடலாம். போக்குவரத்து நெரிசல் உட்பட அனைத்தையும் தடுக்க முடியும்.
போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்: தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்ற நல்ல யோசனை சொல்கிறீர்கள். அப்படியே, தலைநகர் டெல்லியை சென்னைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
அமைச்சர் துரைமுருகன்: தலைநகரை திருச்சிக்கு கொண்டு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதனால், இங்கேயே இருக்கட்டும்.
நயினார் நாகேந்திரன்: திருச்சியை தலைநகராக ஆக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கோரிக்கை.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு: எம்ஜிஆர் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நினைத்தால் மாற்றியிருக்கலாம்.
நயினார் நாகேந்திரன்: மழை பெய்தால் நாடாளுமன்றத்தில் ஒழுகுகிறது என்று போக்குவரத்துறை அமைச்சர் சொல்கிறார். அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்லத் தயாராக இருக்கிறேன்.
அமைச்சர் சா.சி.சிவசங்கர்: பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. அதைத்தான் கூறினேன்.
நயினார் நாகேந்திரன்: ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் மத்திய அரசு தருகிறது என்று உறுப்பினர்கள் சொல்கின்றனர். அதேபோல், முந்தைய காங்கிரஸ் ஆட்சி எவ்வளவு கொடுத்தது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் அப்பாவு: இதற்கான பதிலை நிதியமைச்சர் பேசும்போது சொல்வார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.