திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றில் 10 சதவீதத்தை மட்டும் தான் நிறைவேற்றியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்ற வளாகத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆளுநர் உரை மீது அதிமுக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வரின் பதிலுரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் வெளியிட்டது. இவற்றில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எங்கு சென்றாலும் 95% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் பேசிவருகிறார்கள். அதிலும் குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இனியாவது உதயநிதி ஸ்டாலின் இதை கண்டுபிடிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். படிக்காதவர்களையும், படித்தவர்களையும் ஏமாற்றுகிற அரசு திமுக அரசுதான்.
திமுக ஆட்சி அமைந்தபிறகு என்ன திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதிமுக ஆட்சியில் மக்களை கடனாளியாக்கிவிட்டது என்று திமுக குற்றம் சாட்டியது. அதுவே திமுக ஆட்சி அமைந்த இந்த 33 மாதங்களில் ரூ.2,47,000 கோடி வாங்கியிருக்கிறார்கள். எனினும் எந்த புதிய திட்டமும் கொண்டுவரவில்லை. மக்கள் எந்த பயனும் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கினார்கள்.
அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகளாக தீர்க்க முடியாத காவிரி நதி நீர் பிரச்சினையை சட்ட போராட்டம் நடத்தி தீர்ப்பை பெற்றோம். தீர்ப்பு பெற்றாலும் நடைமுறைப்படுத்த காலதாமதம் ஆனது. அப்போது கூட்டணியில் அதிமுக இருந்தாலும் எங்களது எம்பிக்கள் 37 பேர் மூலம் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து வரலாறு படைத்தது. இதுமாதிரி ஏதேனும் ஒன்றாவது திமுக செய்ததா?
மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லைதானே. அப்படியானால் கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால்தான் நிதி வாங்க முடியும். உங்களுக்குதான் 39 எம்பிக்கள் உள்ளனர். எங்களிடம் இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஓடிவிட்டார். காவிரி விவகாரத்தில் திமுக ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணியில் வேறு இருக்கிறீர்கள். கூட்டணி கட்சிகள் சேர்ந்து மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதிக்கு எத்தனை முறை திமுக குரல் கொடுத்தது என்று சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.