ஒரு சிலரின் பலவீனங்கள், ஆணவத்தால் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருகிறது: குலாம் நபி ஆசாத்

ஒரு சிலரின் பலவீனத்தாலும், ஆணவத்தாலும் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருவது துரதிருஷ்டவசமானது என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்த இவர் கடந்த 2022, ஆகஸ்ட் மாதம் கட்சியை விட்டு விலகினார். பிறகு காஷ்மீரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீப காலமாக மூத்த தலைவர்கள் விலகி வருகின்றனர். இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியுள்ளார். இது மகாராஷ்டிராவில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அவரது தந்தை எஸ்.பி.சவாணும் மகாராஷ்டிராவில் பெரிய தலைவராக விளங்கினார். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். வரும் நாட்களில் காங்கிரஸை விட்டு பலர் விலக இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது அக்கட்சிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.

எனது நாடாளுமன்ற வாழ்க்கை மகாராஷ்டிராவில் தான் தொடங்கியது. அங்கிருந்து மக்களவை உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மேலும் மகாராஷ்டிராவில் இருந்துதான் நான் முதல்முறையாக மாநிலங்களவைக்கும் சென்றேன். இந்தியாவில் மகாராஷ்டிராவில் மட்டுமே காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க முடியும். உ.பி.,மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் ஏற்கெனவே அழிந்துவிட்டது. ஒரு சிலரின் பலவீனத்தாலும், ஆணவத்தாலும் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருவது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.