“தோடர்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி அளிக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ளார். உதகை ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள அவர் இன்று காலை தோடரின மக்களின் தலைமை மந்தமான முத்தநாடு மந்துவுக்கு சென்றார். அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தஏஷ் குட்டன் மற்றும் தலைவர்கள் வரவேற்றனர். அவர் மற்றும் அவரது மனைவிக்கு தோடரின மக்களின் பாரம்பரிய புத்துக்குளி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர், அங்குள்ள தோடர் மக்களின் குலதெய்வ கோயிலான மூன்போ மற்றும் ஓடையாள் வாவ் கோயில்களை பார்வையிட்டு, பின்னர் வழிபட்டார்.
பின்னர் ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி, தோடர் இளைஞர் இளவட்ட கல்லை தூக்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு ஆரவாரம் செய்தனர். அவர்கள் இருவரும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தோடர் மக்களின் கைவினை பொருட்களை பார்வையிட்டனர். பிறகு, தோடரின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தனர். இதையொட்டி, ஆளுநர் ரவி தோடர் மக்களுடன் அவர்களுடன் கைக்கோர்த்து பாரம்பரிய நடனம் ஆடினார்.
அவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ரவி, “தோடர்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி. இது தான் இந்தியா. மக்கள் வளர்ச்சி அடைந்தாலும் தங்களது அடிப்படையை விட்டுவிட கூடாது. ஆல்வாஸ் தோடரின மக்களின் கிராமங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை குறித்த புகைப்படங்களை காண்பித்தபோது, இங்கு வர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. அதனடிப்படையில் இன்று இங்கு வந்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள உங்களின் கோயில்களை பார்வையிட்டதை புனித யாத்திரையாக கருதுகிறேன். என்னையும் எனது மனைவியையும் நீங்கள் உபசரித்தது எனது பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சுமார் ஒரு மணி நேரம் முதல் நாடு பந்தில் நேரத்தை செலவிட்ட ஆளுநர் பின்னர் பகல் 12.30 மணியளவில் ராஜ்பவனுக்கு புறப்பட்டு சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு முத்தநாடு பந்து பகுதியில் எஸ்பி பல.சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.