காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறேனா?: விஜயதாரணி விளக்கம்!

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக வெளியான தகவல்களுக்கு விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி விளக்கமளித்துள்ளார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் விஜயதாரணி போட்டியிட காங்கிரஸில் வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது. ஆனால் கட்சித் தலைமை விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்து அவரும் வெற்றி பெற்றார். அது முதலே விஜயதாரணிக்கு காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த முறையும் எம்.பி சீட் விஜயதாரணிக்கு கிடைக்காது என சொல்லப்பட்டு வருவதால் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று பாஜக தேசிய குழு கூட்டம் நடைபெறும் நிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைகிறார் என சொல்லப்பட்டது. இதை மறுத்த விஜயதாரணி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தற்போது பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போதும் விஜயதாரணி அதிமுகவுக்கு தாவுகிறார் என்ற செய்தி பரவியது. அது போல் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு போகிறார் என இன்னொரு பக்கம் தகவல்கள் வெளியாகின. அந்த நேரம் பார்த்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விஜயதாரணி சந்தித்து பேசியதால் யூகங்களுக்கு கண் காது மூக்கு வைத்து பேசப்பட்டது. ஆனாலும் விஜயதாரணி காங்கிரஸ் தரப்பில் இருந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அது போல் 2021 ஆம் ஆண்டும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதி கிடைப்பதில் சிக்கல் என்பதால் அவர் பாஜகவில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இதை விஜயதாரணி திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயதாரணிக்கு கன்னியாகுமரி தொகுதி கொடுக்க மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனால் தொடர் அதிருப்தியில் இருக்கும் அவர் பாஜகவுக்கு தாவ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் வழக்கம் போல் இந்த வியூகங்களுக்கு பதிலடி கொடுத்து விஜயதாரணி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.