ரவீந்திரநாத்தை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது மார்ச் 20-ந் தேதி இறுதி விசாரணை!

தேனி லோக்சபா தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது மார்ச் 20-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பி என்றால் அது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தான். தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், வேட்புமனுவில் சொத்து, கடன், வருமானம் உள்ளிட்ட விவரங்களை ரவீந்திரநாத் மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேட்பு மனுவில் சொத்து, கடன், வருமானம் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், முறையற்ற வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது தவறு என்றும் கூறி, ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இதனிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனிடையே வழக்கை விசாரித்து முடிக்கும் வரை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி விசாரித்தது. அப்போது, தேனி லோக்சபா தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ரவீந்திரநாத் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் வழக்கு தொடர்ந்த மிலானி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 4-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதனிடையே, திமுவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் வைரவன், தேனி எம்பி ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு தாக்கல் செய்தார்.. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி விசாரித்தது. அப்போது தங்க தமிழ்ச்செல்வன் மனு தொடர்பாக பதில் அளிக்க ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத்தின் பிரதான வழக்குடன் இணைக்கவும் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்கள் விசாரணைக்கு வராத நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தங்க தமிழ்ச்செல்வன் வக்கீல் சி.எஸ்.வைரவன் முறையிட்டார். முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம். ஓ.பி.ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுவை மார்ச் 20-ந் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.