டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று அதிருப்தி தெரிவித்து இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஊழியர்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலம்காலமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்வுகள், நேர்க்காணல் நடத்தி இந்த தேர்வாணையம் அரசு பணிக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. இதற்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்த டிஎன்பிஎஸ்சியில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். ஆனால், பல மாதங்களாக இதற்கு தலைவர் இல்லாத சூழல் இருந்தது. 14 உறுப்பினர் இடங்களில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் டிஎன்பிஎஸ்சியின் பணிகள் தொய்வடைந்து காணப்பட்டன. டிஎன்பிஎஸ்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர் தேர்வுக்கு ஆளுநரின் கையெழுத்து கட்டாயம் தேவை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பல மாதங்களுக்கு முன்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் 8 உறுப்பினர்களை தேவு செய்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதழ் வழங்காமல் கிடப்பில் போட்டார். இந்த பொறுப்புகளுக்கான விண்ணப்பம் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பிய ஆளுநர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என தெரிவித்து ஒப்புதல் தர மறுத்தார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூட தமிழ்நாடு அரசு தரப்பு டிஎன்பிஎஸ்சி விவகாரத்தை பிரதான வாதமாக முன்வைத்தது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேரை நியமனம் செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவன் அருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் உள்ளிட்டோர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். புதிதாக நியமனம் செய்யப்பட்ட இந்த ஐந்து உறுப்பினர்களும் 6 ஆண்டுகளோ அல்லது 62 வயது வரையும் பதவி வகிக்க முடியும். இந்த நிலையில் தான் 5 உறுப்பினர்களில் ஒருவர் கூட வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என விமர்சித்து இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழ்நாட்டின் தனிபெரும் சமுதாயம் வன்னியர் இனம். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்க தகுதியான பலர் அச்சமுதாயத்தில் உள்ள நிலையில், அவர்களை புறக்கணிப்பது தான் சமூக நீதியா? வாழ்க தமிழக அரசின் சமூகநீதி!” என்று குறிப்பிட்டு உள்ளார்.