எங்கள் கூட்டணிக்கு வர பாஜக, திமுக தவிர அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன: ஜெயக்குமார்!

வானதி சீனிவாசன்- தங்கமணி சட்டசபையில் பேசிக் கொண்டு இருந்ததால் மீண்டும் கூட்டணி ஏற்படலாம் எனத் தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக ஜெயக்குமார் முக்கியமான பதிலை அளித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக ஏற்கனவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டது. அதேநேரம் அதிமுகவைப் பொறுத்தவரை இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக ஆரம்பிக்கவில்லை. இதற்கிடையே அவர்கள் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுக தலைமையில் ஒரு மகத்தான கூட்டணி அமைக்கப்படும். தேர்தலுக்கு முன்பு சரியான நேரத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பது குறித்து அறிவிப்போம். அதேநேரம் மற்ற கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்றெல்லாம் தெரியாது. திரும்பத் திரும்ப எத்தனை முறை தான் சொல்வது.. பாஜக உடன் நிச்சயம் கூட்டணி இல்லை. எங்கள் பொதுச்செயலாளரும் இதைத் திட்டவட்டமாக விளக்கிவிட்டார். பாஜக உடன் கூட்டணி இல்லை.. இல்லை.. இல்லை. பிறகு ஏன் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை.. பாஜகவுக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டது. அவர்களுடன் கூட்டணி இல்லை.. இனிமேல் பாஜக உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.. வேறு என்ன தான் சொல்ல வேண்டும்” என்றார்.

தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நட்டா இங்கே வந்த போது ஓபிஎசுக்கு அனுமதி தரவில்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அதிமுக நிலைப்பாடு குறித்துத் தான் நான் பேச முடியும். எங்கள் நிலைப்பாடு தெளிவானது.. பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை எப்போதும் இல்லை. அந்த நிலைப்பாட்டை எங்கள் பொதுச்செயலாளர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். இந்தளவுக்குக் கூறிய பிறகும் எதற்காக மீண்டும் மீண்டும் இதைக் கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை” என்றார்.

வேறு எந்த கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற கேள்விக்கு, “தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி குறித்துப் பேசியுள்ளதைப் பத்திரிக்கையில் தான் பார்த்தேன். எங்கள் தலைமையில் கூட்டணிக்கு வர பாஜக, திமுக தவிர அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால், இன்னும் காலம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பொறுத்து இருந்து பார்ப்போம்” என்றார்.

வானதி சீனிவாசன்- தங்கமணி சட்டசபையில் பேசிக் கொண்டு இருந்ததால் மீண்டும் கூட்டணி ஏற்படலாம் எனத் தகவல் பரவிய நிலையில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், “பாஜக உடன் கூட்டணி இல்லை என்பது ஒட்டுமொத்தமாகக் கட்சி எடுத்த கொள்கை முடிவு.. இரண்டு பேர் நட்பு அடிப்படையில் சந்தித்துப் பேசுவதைக் கண், காது வைத்துப் பேசுவது ரொம்பவே தவறு” என்றார்.