என் மகள்கள் அனிமல் படத்தை பார்க்காதீர்கள் என்று எச்சரித்தார்கள்: குஷ்பூ

சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தை குஷ்பூ கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

தெலுங்கில் மெகா ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. சேது படத்தின் அப்டேட் வெர்ஷன் என்று அந்தப் படம் கூறப்பட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களை சேர்த்தது. அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்கானது. அந்தப் படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோரை வைத்து சந்தீப் இயக்கிய படம் அனிமல். இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் என பல எதிர்மறையான விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக படம் பெருத்த அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறதாம். உலகம் முழுவதும் 800லிருந்து 900 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களே கடுமையான விமர்சனத்தை கொடுத்தனர். பாடக்ர் ஸ்ரீநிவாஸ், ‘அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல்’ என்று கூறியிருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் மறைமுகமாக அனிமலை விமர்சித்திருந்தார். அவர்கள் வரிசையில் கங்கனா ரணாவத்தும் தனது பங்குக்கு, ‘பெண்களின் கண்ணியத்தை போக்கும்வகையில் சமீபத்திய படங்கள் வெளியாகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியிருக்கிறது அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு தாதா சாகேப் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை குஷ்பூ அனிமல் படம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:-

அனிமல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள், முத்தலாக் உள்ளிட்ட வழக்குகளை பார்த்திருக்கிறேன். அனிமல் போன்ற ஒரு பெண் வெறுப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் செய்யும் படமாக மாறியது என்றால் அதனை அந்த இடத்துக்கு கொண்டு சென்ற மக்களின் மனநிலையை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படங்களிலேயே பிரச்னை இருந்தது. ஆனால் நான் இயக்குநரை குறை சொல்லமாட்டேன். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை படங்களில் காட்டுகிறோம். நாங்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பற்றி பேசுகிறோம் என்று சொல்வார்கள். எனினும் மக்கள் அத்தகைய படங்களை பார்க்கிறார்கள்.

என் மகள்கள் அதுபோன்ற படங்களை பார்ப்பது நான் விரும்பவில்லை. ஆனால் அது எதைப்பற்றி பேசுகிறது என்பதை விரும்பியதால் அவர்கள் அனிமல் படத்தை பார்த்தார்கள். அவர்கள் படம் பார்த்துவிட்டு என்னிடம் வந்து அம்மா தயவு செய்து அந்தப் படத்தை பார்க்காதீர்கள் என்று எச்சரித்தார்கள். இப்படிப்பட்ட படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உருவாகும்போதுதான் நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.