பணி காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி அரசுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுவதைப் போல மருத்துவத்துறையிலும் பணி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும். மருத்துவர்கள் பணி காலத்தில் உயிரிழந்து 3 ஆண்டுகளுக்குள் அவர்களின் வாரிசுகள் பதிவு செய்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணிகளில் ஏதாவது ஒன்றை வாரிசுகளுக்கு வழங்க முடியும். பணிக்காலத்தில் இறந்த மருத்துவர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேச உள்ளோம். அனைத்துத்துறையிலும் கருணை அடிப்படையில் பணி தரப்படும் நிலையில் மருத்துவத்துறையிலும் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.