3% ஓட்டு வச்சிருக்க கட்சிக்கு யாராவது போவாங்களா?: எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணைய போவதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் இது முற்றிலும் பொய் என்று கூறிய எஸ்பி வேலுமணி, வெறும் 3 அல்லது 4 சதவீதம் தான் ஓட்டு வாங்கும் பாஜகவுக்கு நான் எப்படி செல்வேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால், தேசிய கட்சிகள் மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளனர். கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு என அரசியில் வேலைகளில் விறுவிறுவென ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக பாஜக தற்போதைய தேர்தலில் தனியாக தான் சந்திக்க இருக்கின்றன. இந்த நிலையில், விளவங்கோடு தொகுதி எம்எல் ஏ விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த விஜயதாரணியை வரவேற்ற அண்ணாமலை, விஜயதாரணி மட்டும் இல்லை இன்னும் பல முக்கிய புள்ளிகள் பாஜகவுக்கு வருகிறார்கள் என்றார். குறிப்பாக, திமுக, அதிமுக என குறிப்பிட்டு சொல்லாமல் பிற கட்சிகளில் இருந்து முக்கிய புள்ளிகள் பாஜகவுக்கு வருகிறார்கள் என்று நேற்று டைம் குறித்து சொன்னார். ஆனால் நேற்று அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் எல் முருகன் பிரதமர் மோடியின் வருகையால் பிற கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வு தள்ளிப்போயிருக்கிறது என்று கூறினார்.

இந்த நிலையில், இது பாஜகவின் வெற்று மாயை என்று ஒரு பக்கம் விவாதம் பறந்த நிலையில், மறு பக்கம் மாற்று கட்சியில் இருந்து செல்லும் முக்கிய புள்ளிகள் யார் யார் என்ற யூகமும் பரவ தொடங்கியது. இதன்படி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பாஜகவில் இணைவதாக ஒரு தகவல் பரவியது. இதேபோல், அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனும் பாஜகவில் இணைகிறார் என சொல்லப்பட்டது. இப்படி யூகங்கள் பரவிய நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அம்மன் அர்ஜுனன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தனிப்பட்ட விஷயத்திற்காக தான் நான் அவினாசி சாலைக்கு சென்றேன் என்றும், அங்கு பாஜக இணைப்பு விழா நடைபெறுவதெல்லாம் எனக்கு தெரியாது என்றும் இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதேபோல் அதிமுகவின் எஸ்பி வேலுமணியும் செய்தியாளர்களை சந்தித்து நான் பாஜகவில் சேர இருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் போலி என்று அவரும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ் பி வேலுமணி பேசியதாவது:-

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நான் 30 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகிறேன். அதிமுகவை பொறுத்தவரை இது தாய் வீடு. இது மிகப்பெரிய கட்சி. உலக அளவிலேயே 7வது இடத்தில் இருக்கிற மிகப்பெரிய கட்சி இது தான். 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதிக தொண்டர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்கள். இது நம்ம கட்சி. இது நம்ம வீடு. சாதாரணமாக இருந்து எங்களை எல்லாம் எம்எல்ஏ ஆக்கி.. அமைச்சர் ஆக்கி.. அழகு பார்த்தவர் எங்க ஜெயலலிதா அம்மா. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. இந்த கட்சியை விட்டுவிட்டு இன்றைக்கு வெறும் 3 சதவீதமோ இல்ல 4 சதவீதமோ ஓட்டு வங்கி வைத்துள்ள பாஜகவில் போய் நான் எப்படி இணைவேன். இப்படி ஒரு வதந்திக்கு எல்லாம் எப்படி பதில் சொல்லுவாங்க.. இதற்கு எல்லாம் பதில் சொல்லாதீங்க.. இதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் டோண்ட் கேர் என்று சொல்லிவிடுங்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.