பாஜக எங்க வீடு.. மிச்சம் மீதி எங்களுக்கு: பண்ருட்டி ராமச்சந்திரன்!

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக, கூட்டணி கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் புதிய கூட்டணி உருவாக்க திட்டமிட்டு வருகின்றன. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுகவும் பாஜகவும் பேசி வருவதாக தெரிகிறது. ஆனால், இதுவரை கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், தேவநாதன் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், பாஜக கூட்டணி தலைவர்கள் நேற்று ஒரே மேடையில் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று ஊகிக்கப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வம் அட்டெண்டன்ஸ் போடுவார். ஆனால் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்காதது விவாதங்களைக் கிளப்பியது. பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வர இன்னும் பாஜக தலைமை விரும்புவதால், ஓபிஎஸ்ஸை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்றும் பேச்சுகள் உலவி வருகின்றன.

இந்நிலையில் தான் இன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன் “விருந்துக்கு வருபவர்கள் சாப்பிட்ட பிறகுதான் வீட்டில் இருப்பவர்கள் கடைசியாகத் தான் சாப்பிடுவார்கள். அதுபோல பாஜகவினர் விருந்தினர்களைத் தான் அழைத்துள்ளார்கள். வீட்டில் இருப்பவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகவே இல்லை. வீட்டில் இருப்பவர்கள் கடைசியாக மிச்சம் மீதி இருப்பதைத்தான் சாப்பிடுவார்களே தவிர, வருபவர்களை உபசரிப்பதுதான் முதல் கடமை. ஒரு பண்பாட்டிற்காக சொல்வது இது. உடனே மிச்சம் மீதி சீட் இருந்தால் நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்று அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. பலமுறை இதனை ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்படுத்தி உள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்து போட்டியிடுகிறார்கள். பல கட்சிகள் சேர்ந்து ஆட்சியை பிடித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்களே தவிர, நிலையான ஆட்சி ஏற்படவில்லை. இந்தியாவில் நிலையான ஆட்சி வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நிலையான ஆட்சி தரக்கூடிய வலிமை பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துடன் வரும் அறிக்கையே அதிகாரப்பூர்வமானது என்றும் மற்றவர்களின் கருத்துகளை பொருட்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.