தங்களை காக்குமாறு ரஷ்யாவில் உள்ள 7 இந்தியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை!

ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள், தங்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ககன்தீப் சிங் (24), லவ்பரீத் சிங் (24), நரேன் சிங் (22), குர்பிரீத் சிங் (21), குர்பிரீத் சிங் (23), ஹர்ஷ் குமார் (20), மற்றும் அபிஷேக் குமார் (21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இருவர் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாரத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு இந்திய அரசிடம் உதவி கோரியுள்ளனர்.

சமூக வலைதளமான எக்ஸில் பரவி வரும் 105 நொடிகள் கொண்ட இரண்டாவது வீடியோவில் இளைஞர்கள குழு, ரஷ்யாவின் குளிர்கால ராணுவ உடையில் இருப்பதைக் காண முடிகிறது. மங்கலான ஒளியிருக்கும் பூட்டப்பட்ட அறையின் ஒரு மூலையில் அவர்கள் இருப்பது தெரிகிறது. ஆறு பேர் ஒன்றாக நிற்க ஹரியாணாவின் கர்னாலைச் சேர்ந்த ஹரிஸ் குமார் எனக் கூறப்படும் நபர் அவர்களின் அவல நிலையக்கூறி அரசின் உதவியைக் கோருகிறார்.

இந்த இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கடந்த ஆண்டு டிச.27ம் தேதி ரஷ்யா சென்றுள்ளனர். அவர்களிடம் ரஷ்ய பயணத்துக்கான 90 நாள் சுற்றுலா விசா இருந்தது. அதற்கு பின்னர் அங்கிருந்து அவர்கள் அருகில் உள்ள பெலாரஸ் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக சேர நிர்பந்திக்கப்பட்டுத்தப்பட்டதாகவும், ரஷ்ய ராணுவத்தில் சேர அவர்களை போலீஸார் நிர்பந்தித்தாகவும், இல்லையெனில் பத்துவருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும் எனக் கூறியதாகவும் இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மார்ச் 3-ம் தேதி வெளியிட்டுள்ள வீடியோவில், “நாங்கள் ராணுவத்தில் உதவியாளர்களாக மட்டும் பணியாற்றினால் போதும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பயிற்சிகளில் ஈடுபடுத்தி உக்ரைன் போருக்கு அனுப்ப தீர்மானித்துள்ளனர். அவர்கள் எங்களைப் பட்டினி போட்டனர், எங்களுடைய போன்களை பறித்துக்கொண்டனர். ஒரு வருடத்துக்கு பின்னர் தான் நாங்கள் இங்கிருந்து செல்ல முடியும் என்று ரஷ்ய ராணுவத்தினர் எங்களிடம் தெரிவித்தனர். உக்ரைன் போரில் வெற்றி பெற தங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதைச் செய்யவில்லையென்றால் நாங்கள் உயிருடன் இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

மார்ச் 4-ம் தேதி வெளியிட்ட இரண்டாவது வீடியோவில் இளைஞர்கள், “எங்களின் அவல நிலையை முன்பே நாங்கள் உங்களுக்கு சொல்லியிருந்தோம். உக்ரைனிலும், ரஷ்யாவிலும் பல இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்திய தூதரகம் மற்றும் இந்திய அரசிடம் எங்களுக்கு உதவும் படி வேண்டுகோள் விடுக்கிறோம். இது எங்களின் கடைசி வீடியோவாக இருக்கலாம். அவர்கள் எங்களை உக்ரைனின் போர் பகுதிக்கு அனுப்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் ரஷ்யா சார்பில் போரிட உருவாக்கப்பட்ட சர்வதேச படையணியில் போரிட சில இந்தியர்கள் முன்வந்துள்ளனர். ரஷ்யப் படையில் சில இந்தியர்களும் இருப்பதாக கூறப்பட்டது. பிப். 29ம் தேதி ரஷ்யாவில் உள்ள 20 இந்தியர்களை தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வர ரஷ்யாவில் உள்ள இந்திய தூரகத்திடம் கேட்டுள்ளதாக மத்திய அரசு முதல்முறையாக தெரிவித்தது. இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் தொடந்து தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.