வரும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தரமாக சின்னம் வழங்கப்பட்டுள்ளது. மாறாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் என்பது கிடையாது. இதனால் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின்போது தங்களுக்கான சின்னத்தை பெற முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும். அதனை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் வழங்கும்.
அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குக்கர் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்தது. குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அவரது கட்சி சந்திக்கும் தேர்தலில் குக்கர் சின்னத்தை கேட்டு வாங்கி பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலிலும் அவர் குக்கர் சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.