“திமுகவினர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முண்டியடித்துக்கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர்” என்று வட சென்னை தொகுதி வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 25) சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் வட சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தனர். இதனையடுத்து யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவதுது:-
அதிமுக சார்பில் வேட்பாளர் ராயபுரம் மனோ இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மண்டல அலுவலகங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்புமனுத் தாக்கல் செய்ய தங்களுக்கான நேரத்தை ஒதுக்கும்படி கோருவது காலம்காலமாக பின்பற்றப்படும் மரபு. அந்த வகையில், ராயபுரம் மனோ தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்பு கொண்டபோது, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அதிகாரி கூறியுள்ளார்.
நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக முன்கூட்டியே வந்துவிட்டேன். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், வேட்பாளர் இல்லாமல் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், நான் 3 நிமிடம் காத்திருந்தேன். பிறகு, வேட்பாளர் வந்தவுடன் அவருடன் சேர்ந்து 5 பேர் சரியான நேரத்தில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் வாயிலில் வருகையை பதிவு செய்தோம். இதற்கான சிசிடிவி காட்சிகளும் உள்ளன. முறைப்படிப் பார்த்தால், முதலில் வந்தது நாங்கள்தான். சரியாக 11.59 மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம்.
எங்களுக்கு அவர்கள் கொடுத்த டோக்கன் எண் 7. நாங்கள் மேலே சென்றோம். அப்போது அங்கு இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துகொண்டிருந்தனர். அதனால், நாங்கள் காத்திருந்தோம். எங்களது டோக்கன் எண் வந்தபோது, திபுதிபுவென்று திமுகவினர், அதாவது திமுக வேட்பாளர், அவருடன் மண்டலத் தலைவர்கள், ஒரு எம்எல்ஏ, மேயர், இப்படி மொத்தமாக எட்டு, ஒன்பது பேர் உள்ளே வந்தனர். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முன்டியடித்துக் கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர்.
எங்களுக்கு இருக்கைக்கூட கொடுக்கவில்லை. அப்போது நாங்கள்தான் 11.59 மணிக்கு எல்லாம் வந்தோம். எனவே, எங்களுடைய வேட்புமனுவைத்தான் வாங்கவேண்டும் என்று கூறினோம். உடனே அவர்களுடைய டோக்கனை காட்டினர். அந்த டோக்கன் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெயரில் இல்லை. திமுகவே பினாமி. அவர்களுடைய டோக்கன் பெயரிலும் பினாமி. பினாமி யாரையோ அனுப்பி டோக்கன் பெற்றுள்ளனர். இதனால், உள்ளே ஒரு வாக்குவாதம் நடந்தது. காரணம் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். தேர்தல் முறைப்படி நடக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வாதிட்டோம்.
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர், முதலில் அதிமுகதான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால், திமுகவினர், அந்த நாற்காலியில் இருந்து எழுந்திருக்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலரை மிரட்டும் தொனியில் அமைச்சர், மேயர், மண்டலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிரட்டினர். ஆனால், அவர் அதிமுகவின் மனுவைத்தான் வாங்குவேன் என்று கூறிவிட்டார். மேலும், தலைமை தேர்தல் அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால், திமுகவினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
திமுகவினர் தேர்தலின் ஆரம்பக்கட்டத்திலேயே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் இங்கு பதிவாகியுள்ளது. ஆளுங்கட்சி தங்களது அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்து அவரை பணிய வைக்கப் பார்த்தனர். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. திமுகவின் டோக்கன் எண் 8, டோக்கன்படி பார்த்தாலும் அவர்கள் எங்களுக்கு பின்னாடிதான். இவ்வாறு அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிப் பெற்றிருந்தார். வேட்புமனு தாக்கலைப் பொறுத்தவரை, அன்றைய தினத்தில்தான், மனு தாக்கல் செய்பவர்களுக்கான வரிசையை முடிவு செய்வார்கள். அந்தவகையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் இரண்டாவது நபராக திமுக வேட்பாளர் டோக்கன் பெற்றிருந்தார். அதுவும் தேர்தல் நடத்தும் அலுவலரால், எங்களுக்கு 12 மணி முதல் 12.30 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சரியாக 12.15 மணிக்கு நானும் வேட்பாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எங்களுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக சென்றோம். இன்று காலையிலேயே வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெயரில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தேர்தல் அலுவலகத்தின் வெளியே உள்ள காவல் துறை பதிவேட்டில் பதிவு செய்திருந்தார். அந்த வகையில், எங்களுடைய வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே நுழைந்தபோது, அதிமுகவினரும் எங்களுடன் கும்பலமாக நுழைந்தனர்.
அவர்களுடைய வேட்பு மனுவைத்தான் முதலில் பெற வேண்டும். அவர்களுடைய வேட்பாளர் முதலில் வந்துவிட்டதாக கூறி பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டனர். தமிழக முதல்வர் எங்கேயும் சட்ட விதிமீறல் இருக்கக் கூடாது என்று எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், எதிரிகள் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே தேர்தலை அமைதியாக சந்திக்க வேண்டும். எங்கும் ஒரு சிறு சலசலப்புக்கு இடமளிக்கக் கூடாது என்ற வகையில், அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டுக் கொண்டிருந்தோம்.
ஆனால், அதிமுகவினர் அவதூறு பேச்சுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக பேசிக் கொண்டிருந்தனர். முறையாக டோக்கன் பெற்றிருந்த கலாநிதி வீராசாமியின் மாற்று வேட்பாளராக ஜெயந்தி வீராசாமி காலை 9 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் பெற்றிருந்தார். இதனால், கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தபோது, ஜெயந்தி வீராசாமியை அழைக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது. எனவே, திமுகவின் மாற்று வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தால், அதிமுகவினர் இப்படிப்பட்ட அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். எல்லாவற்றையும் சந்தித்து, களத்தில் நின்று கடுமையான போராட்டங்களை சந்தித்த இயக்கம் திமுக. ஆட்சி அதிகாரம் இல்லாத நேரத்தில்கூட திமுக கொள்கைக்காக களத்தில் நின்ற கட்சி. எப்போதும் உதயசூரியன்தான் தகதகவென ஜொலிக்கும். அந்தவகையில், இன்றைக்கும் உதயசூரியன் சின்னம்தான் முதலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.