“10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி பெற்று இருக்காது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அன்புமணி ராமதாஸ் ஒரு வேடந்தாங்கல் பறவை. அதனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்” என்று விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு இன்று பதில் அளித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம். எங்களிடம் யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். எங்களின் உயிரை, உழைப்பை கொடுப்போம். அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்போம்.
‘10.5 இடஒதுக்கீடு கொடுத்தோம், ஆனால் அவர்கள் எங்களுடன் கூட்டணி வரவில்லை’ என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 2019-ல் அதிமுகவுக்கு நாங்கள் ஆட்சியை கொடுத்தோம். நாங்கள் இல்லையென்றால் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாத சூழல் இருந்தது. எங்களால் தான் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சியும் இருந்தது. எடப்பாடியும் முதல்வராக இருந்தார். அந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை 10.5 இடஒதுக்கீடு குறித்தும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் வலியுறுத்தினோம். நேரடியாக சென்று கூறினோம், போராட்டம் நடத்தினோம். ஆனால் தேர்தலுக்கு முன்புவரை இழுத்து, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு கடைசி நாள் இடஒதுக்கீடு கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் 4 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கிறது என்றால் 1 மணிக்கு தான் இடஒதுக்கீடு உத்தரவு வெளிவருகிறது. அதற்கு இடையில் நடந்ததை எல்லாம் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை.
உண்மையாகவே அவர்கள் மனதில் பின்தங்கிய சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால், கொஞ்சம் முன்னதாகவே இடஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி வந்தால் தான் இடஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்கள். அதுவும் அவசர அவசரமாக இடஒதுக்கீடு கொடுத்தது அதிமுக. அதில் அவ்வளவு பிழைகள். நாங்கள் கேட்டது 16 சதவிகித இடஒதுக்கீடு. ஆனால் கொடுத்தது 10.5 சதவிகித இடஒதுக்கீடுதான். நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது. நீதிமன்றம் ரத்து செய்த பிறகு மீண்டும் அந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எங்காவது ஒரு இடத்தில் பேசியிருப்பாரா.. இல்லை. இன்று வரை அவர் அதை பேசவில்லை. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பேச அவருக்கு தைரியம் இருக்கிறதா?.
10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக தான் தோற்றதாக அதிமுக தலைவர்கள் பலமுறை சொல்கிறார்கள்.
10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றிபெற்று இருக்காது. அதிமுக ஆதரவாலும் நாங்கள் 4 தொகுதிகளை வென்றோம். ஆனால் 15 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. கடந்த ஆறு மாதமாக விசிகவையும், சீமானையும் கூட்டணிக்கு அழைத்து கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் யாரும் வரவில்லை. அதன்பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார். இப்படி அவர்களை பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு எடுத்துவிட்டோம். எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் பாமக தனது கொள்கைகளை, சித்தாந்தத்தை விட்டுக்கொடுக்க போவது கிடையாது. ஒரு துளி கூட விட்டுக்கொடுக்காது.
திமுக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் கொள்கைகளையும் மறந்துவிட்டது. திமுகவை வைத்து அவர்கள் ஆட்சி நடத்தவில்லை. வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நிர்வாகம் நடக்கவில்லை. வியாபாரம் நடக்கிறது. தமிழகத்தில் ஒரு மாற்று வரவேண்டும் என மக்கள் மனதில் ஆழமாக உள்ளது. ஒரு சில அமைச்சர்கள் பரவாயில்லை. மற்றவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். சமூக நீதிக்கும் திமுகவுக்கு சம்பந்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், ‘நாடகக் காதலால் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்கள் திருமணத்துக்கு இரு தரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்’ என்று பாமக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதி குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்புமணி, “25 வயது வரை உள்ளவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவை. அதற்கு மேல் உள்ளவர்களுக்கு தேவை கிடையாது. ஒரு பெண்ணுக்கு 18 வயது என்பது மிக இளம் வயது. எங்களை பொறுத்தவரை 18 வயது உள்ளவர்களை குழந்தைகளாக பார்க்கிறோம். 18 வயது வந்தவுடன் திருமணம் முடித்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு எதிர்காலமே கிடையாது. தருமபுரி போன்ற இடங்களில் இளம் தாய்மார்களை பார்த்துள்ளேன். அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் நிறைய வருகிறது. சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் பெற்றோர்கள் சம்மததுடன்தான் திருமணம் என்கிற நிலைப்பாடு இருக்கிறது. அதனை தான் நாங்களும் சொல்கிறோம். அப்படி இல்லை என்றால், ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது 21 என்று சட்டம் கொண்டு வாருங்கள். அப்படி சட்டம் வரும்வரை பெற்றோர்கள் ஒப்புதல் தேவை என்று சொல்கிறோம்” என்று அன்புமணி தெரிவித்தார்.
இதே கேள்விக்கு பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “காதலோ, இல்லையோ பெற்றோர்கள் ஒப்புதல் தேவையா இல்லையா. காதலிக்கிறோம் என்பதை பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். ஹார்மோன் சமநிலையின்மை என்று சொல்வார்கள். ஹார்மோன் சமநிலையின்மையின்போது காதல் வயப்படுவது சகஜம். ஆனால் முதிர்ச்சி வரவேண்டும். பெண்கள் படிப்பை முடிக்க வேண்டும். அதேபோல் வேலை கிடைக்க வேண்டும். பெற்றோர்கள் சம்மதம் வேண்டும். அவர்கள் சம்மதம் இல்லையென்றால், வயது, படிப்பு மற்றும் வேலை இருந்தால் பிரச்சினையில்லை” என்று கூறினார்.