வேட்புமனுத் தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையரிடம் வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, அதிமுக வேட்பாளர் மனோகர், சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-
நான் கடந்த 25-ம் தேதி அதிமுக சார்பில், வடசென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தேன். இதற்காக, அன்றைய தினம் பகல் 11.50 மணிக்கு மண்டலம்-5 அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது, எனக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்ட வரிசை எண்-7.
என்னை மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அழைத்த போது எனக்குப் பின்னால் பகல் 12.20 மணிக்கு வந்த திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அவருடன் வந்த அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாதவரம் சட்டப் பேரவை உறுப்பினர் சுதர்சனம், பெரம்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.டி.சேகர்,நகர திட்டமிடல் தலைவர் இளைய அருணாமற்றும் வழக்கறிஞர் மருது கணேஷ் ஆகிய 7 பேர் எங்களைத் தள்ளி விட்டு உள்ளே சென்று, ‘நாங்கள்தான் ஆளும் கட்சி. நாங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்பு தான் நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி தேர்தல் அதிகாரி முன்பு அமர்ந்து எங்களுக்கு அமர இடம் தராமல் சுமார் 2 மணி நேரம் வாக்குவாதம் செய்தனர்.
பிறகு, தேர்தல் அதிகாரி வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகளைப் பார்த்து, அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பிறகு, கலாநிதி வீராசாமி எங்கள் வருகைக்குப் பின் தான் வந்தார் என்று தெரிந்து கொண்டார். மேலும், அவர் பெற்ற டோக்கன் எண்.8 என்று கூறி அவர்களை வெளியே செல்லுமாறு கூறிவிட்டு, எங்களை வேட்புமனுத் தாக்கல் செய்யுமாறு கூறினார். அதற்கு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது. வேட்புமனுத் தாக்கலின் போது தேர்தல் சட்ட விதிமுறையை மீறி 5 பேர் மட்டும் செல்வதற்குப் பதிலாக 7 பேர் உள்ளே நுழைந்ததற்கும் வீடியோ ஆதாரம் உள்ளது.
எனவே அமைச்சர், சட்டப் பேரவைஉறுப்பினர்கள் உள்ளிட்டோர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கும், அரசு அலுவலர்களின் வேலையைச் செய்யவிடாமல் தடுத்ததற்கும் எங்கள் மீது தவறே இல்லாதபட்சத்தில் 2 மணி நேரம்காக்க வைத்து எங்களை மிரட்டியதற்கும், தகுந்த வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.