இண்டியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நேற்று நடந்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை தலைகீழாக மாற்றி அமைக்க பாஜ மோடி வேண்டி வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி இந்தியாவை அலங்கோலமாக மாற்றவும், ஆர்எஸ்எஸ் இந்துத்துவா நாட்டை உருவாக்கவும் மோடி முயற்சித்து வருகிறார். மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் தேர்தல் நடக்காது. இதுவே கடைசி தேர்தலாக இருக்கும்.
ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மட்டுமே மோடியை எதிர்த்து வருகின்றனர். டெல்லியில் முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இரண்டு முதலமைச்சர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலையாகும். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஆனால் மத்தியில் பத்தாண்டு ஆட்சி செய்த மோடி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.
பணமதிப்பு இழப்பு காரணமாக நாட்டில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் பாஜக அரசு எடுக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியவில்லை என்கிறார்கள். அதை ஒழிக்க முடியாவிட்டால் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்?.
இண்டியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவர உள்ளது. அதில், மாணவர்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும். இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கட்சிக்கோ, நபர்களுக்கோ அல்ல. அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் இருக்க வேண்டுமா, இருக்கக் கூடாதா என்பதற்கான தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, “ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள், இந்தியாவின் 2-வது சுதந்திரப் போராட்டத்தின் முடிவுகளாக இருக்கும். மாநிலத்தின் முதல்வர் எப்படி தேர்தல் வாக்குறுதிகளைத் தருகிறார் எனக் கேட்கிறார்கள். இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமாக திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். எனவே, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக தலைவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என்றார்.
முன்னதாக, திருமயத்தில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, “பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அமலாக்கத் துறை வராது, வருமான வரித் துறை வராது. ஆனால், விரோதமாக இருந்தால் அனைத்தும் வரும், கூடவே, சிறையிலும் தள்ளுவார்கள். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும். ஆனால், பாஜகவுக்கு எதிரான அணியில் இருந்தால் கேட்கும் சின்னங்கள் கிடைக்காது. என்னை பொறுத்தவரை இந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவானவர்களுக்கு ஒரு சட்டமும், விரோதமானவர்களுக்கு ஒரு சட்டமும் உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தேர்தலில் பாஜக அணியை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.