“திமுக கொடுக்கும் வாக்குறுதிகள் என்பது தண்ணீரில் போடும் கோலம்; அதிமுக வாக்குறுதிகள் என்பது கோயிலில் போடும் கோலம்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட திரளி கிராம மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் ஆர்.பி.உதயகுமார். அப்போது அவர் பேசியதாவது:-
விஜய பிரபாகரன் முதன்முதலில் தேர்தலில் நிக்கிறார். அவருடைய தந்தை விஜயகாந்த் மக்களுக்காக உழைத்தவர். 2011-இல் அதிமுக கூட்டணி சேர்ந்து ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் தமிழக மக்கள் தீர்ப்பளித்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவில் திமுகவுக்கு தோல்வியை பரிசாக கொடுத்தனர். அதுபோன்ற வரலாற்று வெற்றி மீண்டும் இந்த மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணிக்கு ஏற்பட வேண்டும்.
இந்தக் கூட்டணி தொடர்ந்து இருந்தால் திமுக எங்கே இருக்கிறது என தேடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். திமுக வாக்குறுதி கொடுத்தால், அது தண்ணீரில் கோலம் போடுவது போன்றது. தண்ணீரில் எத்தனை தடவை கோலம் போட்டாலும் அது நிற்குமா? அழிந்து போய்விடும். அதிமுக தேர்தல் வாக்குறுதி என்பது கோயிலில் கோலம் போடுவது போன்றது. அழியாமல் நிலைத்து நிற்கும்.
எம்பி பதவிக்காக தன்னை வளர்த்துவிட்ட இரட்டை இலையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தலில் நிற்கிறார். இன்று டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோத்துள்ளார்கள். முன்பு டிடிவி தினகரனும் ஓபிஎஸ் ஏன் பிரிந்தார்கள்? நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காவா? கொள்கை பிரச்சனையா? இதில் எதுவும் இல்லை. பதவிக்காக பிரிந்தார்கள். மீண்டும் தற்போது பதவிக்காக சேர்ந்துள்ளார்கள். பதவிக்காக பிரிவதும், தர்ம யுத்தங்களை நடத்துவதும், பின்பு பதவிக்காக ஒன்று சேருவதும் தொண்டர்களை ஏமாற்றுவதாகும்.
ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுத்தெருவில் உள்ளார்கள். செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். பழனியப்பன் திமுகவில் உள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் தேனியில் இந்த தேர்தலில் இருக்கிறார். இதற்கு என்ன காரணம்? உங்கள் தலைமையை அதிமுக தொண்டர்கள் யாருக்கும் ஏற்றுக் கொள்ள மனமில்லாததைதான் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.