பாரதிய ஜனதா கட்சியில் உழைக்கின்ற நபர்கள் எளிதாக முன்னுக்கு வர முடியும். ஆனால் திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு தருவார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி நாமக்கல் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் திருச்செங்கோடு அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறி தைரியமாக வாக்கு கேட்கும் கூட்டணி பாஜக மட்டும் தான். மற்ற கூட்டணிகளில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் எம்பிகளே இல்லாவிட்டாலும் பிரதமரின் அனைவருக்கும் வீடு, ஜல்ஜீவன், அனைத்து இல்லங்களிலும் கழிப்பறை போன்ற பல்வேறு நலத்திட்டங்களால் இன்று தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்.
ஒரு காலத்தில் வங்கிக்கு சென்றாலே பணக்காரர் என்ற சூழல் இருந்து வந்ததை மாற்றி இன்று தடி ஊன்றி நடக்கின்ற பாட்டிக்கு கூட வங்கி கணக்குகள் உள்ளன. அதில் நேரடியாக சிலிண்டர் மானியமும், விவசாய மானியமும் எந்த ஒரு இடைத்தரர்களும் இல்லாமல் வந்து சேர்கின்றது. அதற்கு காரணம் பாரத பிரதமர் மோடி.
மத்திய அரசு நிதிகள் தரவில்லை என்று தொடர்ச்சியாக கூறியே தாத்தா அப்பா பேரன் என தொடர்ந்து ஊழல் செய்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியில் உழைக்கின்ற நபர்கள் எளிதாக முன்னுக்கு வர முடியும். ஆனால் திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு தருவார்கள்.
நான் நேற்று கன்னியாகுமரி சென்றிருந்தபோது அங்கு இருந்த திருவள்ளுவர் சிலையை காணவில்லை என தேடினேன். பிறகு தான் தெரிந்தது அதற்கு லைட் கூட போடாமல் பராமரிப்பு இல்லாமல் இருப்பது குறித்து. ஆனால் நமது பாரத பிரதமர் மோடியோ ஐநா சபை முதல் பல்வேறு உலக நாடுகளிலும் உலக அரங்குகளிலும் தமிழையும் திருக்குறளையும் முன்னிலைப்படுத்தியும், செங்கோலை எடுத்து நாடாளுமன்றத்தில் வைத்து பெருமைப்படுத்துகிறார். தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் இன்று பிரதமருடைய தமிழ் பற்றி கிண்டல் அடிக்கிறார்கள். இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் வாகன பேரணியை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், “பிரதமரின் வாகன பேரணி குறித்து எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். வாகன பேரணியில் ஏதோ ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு பிரதமரை விமர்சிப்பதற்கு பதிலாக, அவரை பார்ப்பதற்கு வரும் லட்சக்கணக்கான மக்களை எதிர்கட்சியினர் பார்க்க வேண்டும். பிரதமர் மோடியின் மீதான அன்பை மக்கள் வெளிப்படுத்துவதை ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் பார்க்கிறோம். பா.ஜ.க.வை அழிப்போம் என திருமாவளவன் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சொல்லச் சொல்ல தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. யார், யாரை அழிக்கிறார்கள் என்பதை ஜூன் 4-ந்தேதி பார்க்கலாம் ” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.