இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது அவசியம்: சீன வெளியுறவு துறை!

இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ‘நியூஸ்வீக்’ வாராந்திர இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய, சீன எல்லைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளிடையே நிலவும் அசாதாரண சூழ்நிலையை மாற்ற முடியும். இரு நாடுகள் இடையே சுமுக உறவு நீடிப்பது இந்த பிராந்தியத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் நல்லது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பேட்டி குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மா நிங் நேற்று பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளை சீன அரசு முக்கியமானதாக கருதுகிறது. இந்தியா, சீனா இடையே வலுவான, ஸ்திரமான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது. அதோடு மட்டுமன்றி இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடித்தால் இந்த பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி ஊக்கம் பெறும்.

இரு நாடுகள் இடையே தற்போது ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பரஸ்பரம் நம்பிக்கை, ஒத்துழைப்பு மூலம் கருத்து வேறுபாடுகளை களைய முடியும். இவ்வாறு மா நிங் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமா் மோடியின் கருத்துக்கு சீன அரசின் ‘சீனா டெய்லி’ செய்தி நாளிதழில் வெளியான தலையங்கத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டுமென்ற தனது விருப்பத்தை இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளாா். எல்லைப் பிரச்னைகளுக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய தீா்வை கண்டறிய இருதரப்பும் முயற்சித்து வரும் நிலையில், பிரதமா் மோடியின் கருத்து நல்லெண்ணத்தின் வெளிப்பாடாகும். இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு சரியான நேரத்தில் ஊக்கமளிக்கும் இந்த நகா்வு வரவேற்புக்குரியது’ என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் இந்திய-சீன படையினா் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எல்லைப் பிரச்னைகளுக்கு தீா்வுகாண ராணுவ ரீதியில் இதுவரை 21 சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்பலனாக, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காக் ஏரி உள்ளிட்ட 4 இடங்களில் இதுவரை படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும் சில பகுதிகளில் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டியுள்ளது. எல்லையில் அமைதியை உறுதி செய்யாமல், இருதரப்பு இயல்பான உறவுகளுக்கு வாய்ப்பில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.