திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: நடிகை விந்தியா

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகர் விந்தியா பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் பகுதியில் பேசியதாவது:-

2 சீட்டுக்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார் இத்தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன். கோயிலைப் பற்றி கேவலமாக பேசுகிறார். தேர்தல் வந்தால் குனிந்து கும்பிடு போடுகிறார்.
தமிழகத்தில் தாமரை எப்படி மலரக் கூடாதோ அது மாதிரி திமுக கூட்டணியும் வளரக்கூடாது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுகவை எதிர்த்து கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார். ஷேக்ஸ்பியர் முதல் சிலப்பதிகாரம் வரை கரைத்துக் குடித்த வைகோ, திமுகவை உடைத்து மதிமுகவை உருவாக்கினார். அதே திமுகவிடம் ஒரு சீட்டுக்காக ஸ்டாலினிடம் அவர் கைகட்டி நிற்பது வருத்தமாக இருக்கிறது.

திருமாவளவன் கூட்டணி பேச்சை தொடங்கும் போது வீரமாக ஆரம்பிப்பார். ஸ்டாலின் 2 தொகுதிகளை கொடுத்ததும், வாயை மூடிவிட்டு வந்து விடுவார். காங்கிரஸில் தலைமையும் இல்லை; தலைவர்களும் இல்லை. ‘6 சீட் வேண்டும்’ என்று அவர்கள் எழுதி கொடுத்துள்ளனர். அதை தலைகீழாகப் படித்த ஸ்டாலின் 9 சீட்டுகளை கொடுத்து விட்டார். இவர்களெல்லாம் மக்களுக்கு நல்லது செய்வதற்காக கூட்டணி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, அவர்களை நல்ல வளமாக வைத்துக் கொள்ள கூட்டணி வைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.