பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். கட்டடத்தில் தீ பற்றியது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
பாட்னா ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தங்கும் விடுதியில் இந்த விபத்து நேரிட்டதாகவும், கட்டடத்துக்குள் இருந்து கிட்டத்தட்ட 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புத் துறை துணை இயக்குநர் இதுபற்றி கூறுகையில், இதுவரை இப்பகுதியில் உள்ள 16 ஆயிரம் விடுதிகளில் ஆய்வு நடத்தி அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளோம். ஆய்வு நடத்த வேண்டிய விடுதிகளின் பட்டியலில் இது உள்ளது. நாங்கள் கொடுக்கும் அறிவுறுத்தல்களை ஒரு சில விடுதிகள் செய்கின்றன. பல விடுதிகள் செய்வதில்லை. முதற்கட்ட தகவலின்படி, சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 11 மணியளவில் தீ விபத்துக்குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதாகவும், விசாரணைக்குப் பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.