அமெரிக்காவில் காசாவுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல்!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்களை போலீஸார் வலுகட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், போரை உடனடியாக தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் காசா போரை நிறுத்தக் கோரி பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.

நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் ஹார்வர்ட், யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் பரவியது. மாணவர்களின் போராட்டத்தை கலைக்கும் நோக்கில் புதன்கிழமை அதிகாலை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமைத்த கூடாரங்கள் அகற்றப்பட்டு சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவர்களின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டத்தில் தற்போது சேர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்திய அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர் மைக் ஜான்சன், போராட்டத்தை நிறுத்த முடியவில்லை என்றால் பல்கலைக்கழக தலைவர் மனோஷ் ஷபிக்கை ராஜிநாமா செய்யுமாறு தெரிவித்துள்ளார். மேலும், போராட்டம் நிறுத்தப்படாவிட்டால் காவல்துறையினர் மூலம் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கொலம்பியா, ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் போராடும் மாணவர்களை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதனால், அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதற்றமான சூழல் எழுந்துள்ளது.