மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு எம்எல்ஏக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக ஏப்.19-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடர்ந்து அடுத்த கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநிலத்துக்குள் கண்காணிப்பு குறைக்கப்பட்டாலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தொடர்கிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் அங்கும் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அகற்றப்படும் என தெரிகிறது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள எம்எல்ஏக்களின் அலுவலகங்களும் மூடி சீல் வைக்கப்பட்டன. இதுதவிர நகராட்சித் தலைவர் அலுவலகம், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான அலுவலகங்களும் மூடப்பட்டன.
இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகும் சூழலில், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் அலுவலகங்களை திறந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து, தலைமை தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர். பல்வேறு எம்எல்ஏக்கள் அலுவலகங்களில், இ-சேவை மையமும் செயல்படும் நிலையில், அவசியம் கருதி திறக்க வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் என தெரிகிறது.