தடையற்ற மின் விநியோகம் தொடர்பாக தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தடையில்லா மின்விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில்,மே 2-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே இறுதி வரையிலான இக்காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் மின்தேவையும் அதிகரிக்கும். தமிழகத்தில் தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், விநியோகத்தில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழகத்தில் அனைத்து மின் உற்பத்திநிலையங்களிலும் தற்போதைய உற்பத்தி அளவு, முறையாக பராமரிப்புப் பணி நடைபெறுகிறதா, வெளியில் இருந்து வாங்கப்படும் மின்சாரம் சரியான அளவு கிடைக்கிறதா? மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதேபோல், மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும்பட்சத்தில், அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது தடையின்றியும், சரியான அழுத்தத்துடனும் மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகாரிகளுக்கு தலைமைச்செயலர் அறிவுறுத்தியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.