வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து, விவசாயிகள் சார்பில் 111 பேர் போட்டியிடுவதற்காக, வாரணாசிக்கு இன்று (மே 10 ஆம் தேதி) காலை ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது விவசாயிகளின் முன்பதிவுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், தஞ்சாவூரில் விவசாயிகள் ரயிலின் அபாயசங்கிலியை இழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிய பிரதமர் மோடியை எதிர்த்து, அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் விவசாயிகள் 111 பேர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் திருச்சி பி.அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியிலிருந்து வாரணாசிக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர். அதன்படி இன்று (மே 10 ஆம் தேதி) காலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த கன்னியாகுமரி- காசி தமிழ்சங்க வாராந்திர ரயிலில் அய்யாக்கண்ணு தலைமையில் 39 விவசாயிகள் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினர். மீதமுள்ள விவசாயிகள் ஆங்காங்கே இந்த ரயிலில் பல இடங்களிலிருந்து பயணம் செய்ய உள்ளனர்.
ஆனால், ரயில்வே ஊழியர்கள் விவசாயிகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இன்று காலை 6.43 மணிக்கு வந்து, ரயில் புறப்பட இருந்த நேரத்தில் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே அதிகாரிகள், போலீஸார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன்பதிவுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அப்போது ரயில்வே அதிகாரிகள் மீண்டும் விழுப்புரத்தில் தனி பெட்டி இந்த ரயிலில் இணைத்து விவசாயிகள் தொடர்ந்து பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அதே ரயிலில் ஏறிச் சென்றனர். இதனால் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இந்த ரயில் 2 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து பி.அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எந்த வித நல்ல திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. இதனால் விவசாயிகள் நாட்டில் பல்வேறு இடங்களில் பல விதமான போராட்டங்களை நடத்தியும் பிரதமர் மோடி எதையும் கண்டுகொள்ளவில்லை. எனவே தான், பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து 111 பேர் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய எனது தலைமையில் விவசாயிகள் புறப்பட்டுச் செல்கிறோம்.
எனவே, ரயிலில் செல்ல நாங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்த நிலையில், எங்களுக்கு எஸ் 1 பெட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு மே 9 ம் தேதி குறுஞ்செய்தி மூலம் தகவல் வந்தது. ஆனால் இன்று 10ம் தேதி காலை திடீரென முன்பதிவு செய்த பெட்டி பழுதாகிவிட்டது என கூறி முன்பதிவை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து 36 மணி நேரம் எப்படி நின்று கொண்டே பயணம் செய்வது, பிரதமர் மோடியை எதிர்த்து விவசாயிகள் போட்டியிடுவதை தடுக்கவே இது நடப்பதாககக் கருதுவதால், நாங்கள் தஞ்சாவூரில் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.