தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கூட்டம் நிறைந்த அரசு பஸ்சில் மக்களோடு மக்களாக நின்றபடி பயணித்தார். அவருடன் தெலுங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் நிர்வாகிகளும் நின்றடி பயணித்தனர். ராகுல் காந்தியின் இந்த செயல் ஹைதராபாத்தில் கவனம் பெற்றது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறியது. தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக தெலுங்கானாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி 9 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளாக கூறப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறையை விட இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மே 13ம் தேதி தேர்தல் என்பதால் தற்போது தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தி எம்பி பொதுக்கூட்டத்தில் பேசினார். ஹைதரபாத்தில் உள்ள மலிகாஜ்கிரி பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வென்றால் கொண்டு வரப்படும் திட்டங்கள், 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சி மக்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக பேசினார்.

அதன்பிறகு பிரசார பொதுக்கூட்டத்தை முடித்த ராகுல் காந்தி காரில் பயணிப்பதை தவிர்த்தார். மாறாக அவர் அரசு பஸ்சில் பயணித்தார். அந்த வழியாக கூட்டம் நிறைந்து வந்த அரசு பஸ்சில் ராகுல் காந்தி திடீரென்று ஏறினார். அவருடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளும் ஏறி பயணித்தனர். திடீரென்று அரசு பஸ்சில் ராகுல் காந்தி ஏறியதை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அவரை ஆச்சரியமுடன் பார்த்தனர். அதன்பிறகு ராகுல் காந்தி பஸ்சில் பயணித்த பெண்களிடம் இலவச பயண திட்டம் பற்றி கேட்டறிந்தனர். அப்போது அந்த திட்டம் தங்களுக்கு பெரிதும் பயணளிப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்த பயணத்தின்போது பெண்கள் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர். அதேபோல் ராகுல் காந்தியும் அவர்களின் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்து வழங்கினார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் மக்களோடு, மக்களாக சாதாரணமாக பஸ்சில் பயணித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.