பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஐ.நா. தீா்மானத்தை நெதன்யாகு நிராகரிப்பு!

பாலஸ்தீனத்தை முழு உறுப்பு நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீா்மானத்தை இஸ்ரேல் நிராகரிப்பதாக அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளாா்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்க வழிவகுக்கும் ஐ.நா. பொதுச் சபையின் தீா்மானத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது. ஏற்கெனவே எங்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஒரு பிரிவினா், அந்தத் தாக்குதலை இன்னும் தீவிரமாக நடத்துவதற்காக ஒரு பயங்கரவாத நாட்டை நிறுவ நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்களைத் தற்காத்துக்கொள்வது எங்கள் அடிப்படை உரிமை. அந்த உரிமையை நாங்கள் நிலைநாட்டுவதை ஐ.நா. உள்ளிட்ட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச் சபையின் முழு உறுப்பினராக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வாரம் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தன. மிகப் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் தீா்மானத்தை ஆதரித்ததால் அது பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.