அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி அவர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் வசைபாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “முட்டாள்களை வைத்து இந்த நாட்டை நடத்தி வருகிறோம். நம்மிடம் திறமையற்றவர்கள் இருப்பதால் அடுத்த 5 மாதங்களில், அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக 3-ம் உலகப் போர் தொடங்கும். இன்று ஆயுத பலம் மிகவும் பயங்கரமாக இருப்பதால் நம் நாட்டில் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள். நம் நாடு மிகவும் பலவீனமாக உள்ளது. 3-ம் உலகப் போரில் விரைவில் முடிவடையும் நாடாக நமது நாடு உள்ளது. ஏனென்றால், நம் நாட்டை வழிநடத்தும் முட்டாள்கள்தான் நம்மிடம் இருக்கிறார்கள்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான டி.வி. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு விவாதத்தில் பங்கேற்பவர்களுக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்ய வலியுறுத்துவேன் எனக் கூறினார்.