அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர்.
77 வயதான ட்ரம்ப், கடந்த 2017 முதல் 2021 வரையில் அமெரிக்க நாட்டு அதிபராக இயங்கியவர். அவர் அந்த நாட்டின் 45-வது அதிபராக அறியப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் தற்போது மீண்டும் அதிபர் வேட்பாளராக களம் கண்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன், வரும் ஜூலை 11-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார். குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 லட்சம் டாலர்களை 2016-ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக 11 இன்வாய்ஸ், 11 காசோலை மற்றும் 12 வவுச்சர் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக ட்ரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்த 34 ஆவணங்களும் போலி என்பதை தான் தற்போது ஜூரிகள் கண்டறிந்துள்ளனர். அதையடுத்து அவர் குற்றவாளி என்றும் அறிவித்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் முறைகேட்டு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ரேஸில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் ட்ரம்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இருக்காது என தகவல்.
“இது எனக்கு அவமானம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை. இதை மேற்கொண்ட நீதிபதி ஊழல்வாதி. நமது தேசமே இந்த மாதிரியான மோசடியை இப்போது எதிர்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை பழிக்கும் வகையில் பைடன் நிர்வாகம் இதை செய்து வருகிறது. நமது அரசியல் சாசனத்துக்காக நாம் போராட வேண்டி உள்ளது” என ட்ரம்ப் மிகவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
“யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை” என அதிபர் ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ட்ரம்ப் வழக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு அதிபர் ட்ரம்ப் ஆளாகியிருந்தார். அதன் பின்பு அவரை அந்த சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. போட்டியிடுபவர் அமெரிக்க குடிமகனாகவும் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.