குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் இறந்ததொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.
குவைத் நாட்டின் மங்கப் பகுதியில் 7 மாடி கட்டிடம் ஒன்றில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அந்தக்கட்டிடத்தின் தரைதளத்தில் பாதுகாவலர் அறையில் கடந்த 12-ம் தேதி மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். தீமளமளவென கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியது. இதில் உறங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில்இந்தியர்கள் 46 பேர், பிலிப்பைன்ஸை சேர்ந்த 3 பேர் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர்என 50 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரும் அடங்குவர்.
இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.12.5 லட்சம்) நஷ்ட ஈடு வழங்குவதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. அரசு வட்டார தகவல்களை மேற்கோள் கோட்டி அராப் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ‘‘உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நடைமுறைகள் முடிந்துவிட்டன. சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக நஷ்ட ஈட்டு தொகை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த தூதரகங்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் நஷ்ட ஈட்டு தொகையை ஒப்படைக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக உயிரிழந்த இந்திய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது. உயிரிழந்த 24 மலையாளிகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள மாநில அரசும் அறிவித்துள்ளது.