நேபாளத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால், சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், 7 இந்தியர்களும் மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் சிக்கிய ஒரு பேருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த ஏஞ்ஜெல் பேருந்து என்பதும், அதில் 24 பயணிகள் இருந்ததாகவும், மற்றொரு பேருந்து காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகவும், இதில் 41 பயணிகள் இருந்ததாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. காத்மாண்டு வந்துகொண்டிருந்த பேருந்தில் இருந்த 21 பயணிகளில் ஏழு பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்வதற்கு முன்பே, அதிலிருந்து குதித்து மூன்று பயணிகள் காயத்துடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்த இந்தியர்களில் சந்தோஷ் தாகூர், சுரேந்திர சாஹ், அதித் மியான், சுனில், ஷானவாஸ் ஆலம், அன்சாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு இந்தியரின் அடையாளம் தெரியவரவில்லை.
மத்திய நேபாளத்தில், ஓடிக்கொண்டிருக்கும் திரிசூலி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அதன் கரைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அருகிலிருந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததாகவும், இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேருந்துகளில் ஏழு இந்தியர்கள் உள்பட 65 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால், மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சித்வான் மாவட்டம், சிமல்தால் பகுதியில், நாராயண்படித்துறை – முக்லிங் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்துகள் திடீரென மாயமாகின. சாலையில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி அவை ஆற்றுக்குள் விழுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. விபத்து நேரிட்ட இடத்தில் மண் சரிவுகளை அகற்றும் பணியும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில், படகுகளில் சென்று பயணிகளை தேடும் பணியிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், சாலை முழுக்க நிலச்சரிவினால் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையும் சரிந்துவிழ, கீழே ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் வெள்ளப்பெருக்கில், பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பேருந்து ஓட்டுநர்கள் உள்பட இரண்டு பேருந்துகளிலும் 65 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க, அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, காத்மாண்டு – பரத்பூர் மற்றும் சித்வான் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேபாளத்தில் பருவமழை தொடங்கி கடந்த 4 வாரங்களில் மட்டும் மழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் 74 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குவது போன்ற நிகழ்வுகளே காரணமாக இருந்துள்ளன.