அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி மாணவர்களின் போராட்டத்தில் நேற்று (ஜூலை 18) வன்முறை அதிகரித்ததில் 32 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரசு தொலைக்காட்சி தலைமையகத்துக்கு தீ வைத்ததால் போராட்டம் மேலும் மோசமடைந்துள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இடஒதுக்கீடு உட்பட பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் டாக்கா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2018-ம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவினை ரத்து செய்து இடஒதுக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த அந்நாட்டு உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை ஆகஸ்ட் 7ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை இடைநிறுத்தி வைத்தது.
நீதிமன்றத்தின் உத்தரவினை காரணம் காட்டி மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்க ஷேக் ஹசீனா அரசு மறுத்த நிலையில் போராட்டம் உருவெடுக்கத் தொடங்கியது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் பிரிவினருக்கும் இடஒதுக்கீடுக்கு எதிரான ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் இடையிலான போராட்டம் இந்த வாரத்தில் வன்முறையாக மாறியது. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசி, ரப்பர் புல்லட்கள் உபயோகித்ததும் பலனளிக்கவில்லை.
வன்முறை அதிகரித்ததன் காரணமாக நேற்று வியாழக்கிழமை மதியம் முதல் தலைநகர் டாக்காவுக்கு வந்து செல்லும் மெட்ரோ ரயில் சேவையை அதிகாரிகள் நிறுத்தினர். அதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொபைல் இணையை சேவையை அரசு தடை செய்தது. வியாழக்கிழமை முற்பகுதியில் வங்கதேச போலீஸின் இணையதளம் செயல்படவில்லை என்றும் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் அமைப்பான பங்களாதேஷ் சத்தரா லீக் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. வன்முறை அதிகரித்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை காலவரையின்றி மூட வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.