தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் நாளை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து நாளை முதல் மாணவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பெருக்குவதிலும் குறிப்பாக இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்துவதிலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். அதேபோல, பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரியில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை (ஆகஸ்ட் 9) கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள். இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது.
