வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு!

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு நேற்று நடைபெற்றது. இந்த புதிய அரசு வங்கதேசத்தில் தேர்தலை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் மருத்துவ சிகிச்சையில் இருந்த யூனுஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று டாக்கா திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாடு மிகவும் அழகான தேசமாக மாற இது ஒரு வாய்ப்பு. எங்கள் மாணவர்கள் எந்தப் பாதையைக் காட்டுகின்றார்களோ, அதனை முன்னெடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். முகம்மது யூனுஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக ராணுவ விமானம் மூலம் டாக்காவில் இருந்து புதுடெல்லிக்கு தப்பி வந்தார். தற்போது அவர் டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அடுத்து அந்நாட்டின் ராணுவத் தளபதி நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்தார். இதையடுத்து, இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வேறு யாரை நியமித்தாலும் அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.