கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவை அழித்துவிடுவார்: டிரம்ப்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆக. 6 அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து எதிரணியில் களம் காணுகிறார் இந்திய வம்சாவளிப் பெண்மணி கமலா ஹாரிஸுக்கு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பைவிட வெற்றி வாய்ப்பு சற்றே அதிகரித்திருப்பதாக தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை கலந்துரையாடியுள்ளார். அவருடனான பேட்டியில் டிரம்ப் பேசியதாவது:-

ஜோ பைடனுக்கு பதிலாக, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாற்றப்பட்டுள்ளது அரசியல் தார்மீகத்தை மீறிய அரசியல் விரோத போக்கு. கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரி கொள்கையாளர், நம்பிக்கையும் தகுதியுமற்ற மூன்றாம் தர வேட்பாளர், தற்போதைய அதிபர் ஜோ பைடனைவிட தகுதியற்ற ஒரு நபர்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர் நுழைவதை தடுப்பதில் கமலா ஹாரிஸ் தோற்றுவிட்டார். இதன் காரணமாக அமெரிக்காவில் குற்றங்களின் எண்ணிகையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கமலா பொய் பேசுபவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பைடன் அரசின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், அதே வேளையில், ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளதும் கவனிக்கத்தக்கது. பைடன் அரசின்கீழ், அமெரிக்க பொருளாதாரம் நலிவடைந்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

எலான் மஸ்க் – டொனால்டு டிரம்ப் இடையேயான உரையாடலை சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் கேட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.