முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு!

இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலை வழக்கில் ஷேக் ஹசீனா உள்பட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின்போது, கடை உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஷேக் ஹசீனாவும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் போராட்டங்கள், வன்முறை சம்பவங்களின் எதிரொலியாய் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வங்கதேசத்திலிருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய பின் அவர் மீது பதிவாகியுள்ள முதல் வழக்கு இதுவாகும்.

மொகம்மதுபூரில் கடை நடத்தி வந்த அபூ சையத் என்பவர், கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமானவர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலர், முன்னாள் உள்துறை அமைச்சர், காவல்துறை முன்னாள் ஐ.ஜி. உள்பட உயரதிகாரிகள் பலர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.