கனடாவில் இந்துகள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குள்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று (நவ. 3) தாக்குதல் நடத்தியுள்ளனர். தீபாவளியையொட்டி கோயிலுக்கு வருகை தந்திருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபை கோயிலில் நேற்று தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் நடத்திய வன்முறைச் செயல்களை கண்டிக்கிறோம். இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கனடா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம். வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் வன்முறையால், இந்தியர்களுக்கும் கனடா குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சேவைகளை தூதரக அதிகாரிகள் வழங்குவதை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கனடாவில் தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இந்து கோயில் முன்பு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது கொடிக்கம்பங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தப் போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்தனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் பரவியது.
இதனிடையே, இந்து கோயில் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.