அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா சதி?

அமெரிக்காவில் இப்போது அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும் நிலையில், மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்கத் தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா போலியான வெடி குண்டு மிரட்டல்களை விடுத்துள்ளதாகப் பரபர புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் இந்த முறை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள். இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. கடைசிக்கட்டத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளிலும் இருவருக்கும் கிட்டதட்ட சமமான ஆதரவே இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. அந்தளவுக்குத் தேர்தல் மிக நெருக்கமானதாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் என்ன தான் நாடு முழுக்க நடந்தாலும் கூட அங்கு முக்கியமாக இழுபறி நிகழ்வது என்னவோ 7, 8 மாகாணங்களில் தான். இந்த மாகாணங்களில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தீர்மானிக்கப்படும். அப்படி இழுபறி நிகழும் மாகாணங்களில் முக்கியமானது ஜார்ஜியா. அங்கு மொத்தம் 15 எலக்டோரல் வாக்குகள் உள்ள நிலையில், அது யார் பக்கம் போகிறது என்பது முக்கியமானதாக இருக்கிறது.

இதற்கிடையே அங்கு வாக்குப்பதிவு நடக்கும் போதே, இரு வாக்குச்சாவடிகளில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஜார்ஜியாவின் ஃபுல்டன் கவுண்டியில் உள்ள அந்த இரண்டு வாக்குச் சாவடிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் வெளியேறினர். போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் வாக்குச்சாவடிகளை முழுமையாகச் சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. வெடி குண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு வாக்குச்சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டன. போலி வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இங்கு வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிலையில், இரு வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே இந்த வெடிகுண்டு புரளிகளுக்குப் பின்னால் ரஷ்யத் தலையீடு இருப்பதாக ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் தலைவர் பிராட் ராஃபென்ஸ்பர்கர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அவர்கள் அமெரிக்க தேர்தலைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். சுமுகமான, நியாயமான முறையில் தேர்தல் நடக்கக்கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள்” என்று அவர் விமர்சித்தார்.

அமெரிக்க உளவுத் துறை அமைப்பான எஃப்.பி.ஐ கூட இதில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது பல வாக்குச்சாவடிகளுக்கு வெடி குண்டு வந்துள்ளதாகவும் அவை ரஷ்ய மின்னஞ்சல் டொமைன்களில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடும் போட்டி இருக்கும் ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டிற்கு வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அதேநேரம் ரஷ்யா மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் அமெரிக்க அரசியல்வாதிகள், உளவுத் துறை அதிகாரிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யா மீது முன்வைத்துள்ளனர். அப்போதெல்லாம் ரஷ்யா தனது குற்றச்சாட்டுகளை மறுத்தே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.