இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை: 5 பேர் பலி!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கக்கோரி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி செல்கிறார்கள். இந்த பேரணியில் திடீரென நேற்று வன்முறை வெடித்த நிலையில், இதில் ஐந்து பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும், போலீசார் போராட்டக்காரர்கள் உட்படப் பல நூறு பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018 – 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். தோஷகானா வழக்கு, சைபர் வழக்கு என 71 வயதான இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் கடந்த பிப். மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடந்த நிலையில், அதில் இம்ரான் கான் கட்சியினர் போட்டியிட்டனர். இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சுயேச்சைகளாக அவரது கட்சியினர் களமிறங்கினர். அப்படியிருந்தாலும் சுமார் 90 இடங்களில் வென்றனர். இருப்பினும், இம்ரான் கான் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டு இருந்தார்.

இதற்கிடையே இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த பேரணிக்கு இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி தலைமையேற்றுள்ளார். இந்த பேரணி நேற்று மாலை இஸ்லாமாபாத்தை அடைந்தது. அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்தது. இன்று செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் மீண்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சௌக் என்ற பகுதியை நோக்கி மீண்டும் தங்கள் பேரணியை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை ஏற்பட்ட வன்முறையில், ஒரு போலீஸ் அதிகாரி பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.. இம்ரான் கான் ஆதரவாளர்களால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போலீஸ் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டதால் பல நூறு பேர் காயமடைந்தனர்.