இம்ரான் கான் பதவி விலகிய பின்னரும் பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான் நாட்டில் பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில் கடந்த வாரம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இருப்பினும், தனது ஆட்சியைக் கவிழ்க்க அந்நிய நாட்டுச் சதி இருப்பதாகச் சாடிய இம்ரான் கான், பாக். ஜனநாயகத்தைக் காக்கப் பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இம்ரான் கானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இன்னும் கூட முடிவுக்கு வராமல் தொடர்கிறது.
இந்தச் சூழலில் பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பேசிய இம்ரான் கான், “பாக். அரசில் அங்கம் வகிக்கும் போது, நான் ஆபத்தானவனாக இருக்க மாட்டேன். ஆனால் ஆட்சியில் இல்லாத சமயத்தில் நான் மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன்” என்று அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற நள்ளிரவில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
நேற்று நடைபெற்ற பேரணியில் இம்ரான் கான் மேலும் பேசுகையில், “நீதிமன்றங்கள் இரவில் திறக்கப்பட்டது ஏன்? நான் ஏதேனும் சட்டத்தை மீறி உள்ளேனா? நீதித்துறை சுதந்திரமான முறையில் செயல்படவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் நான் ஒருபோதும் மக்களை எதற்கு எதிராகவும் தூண்டியதில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரசை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் ஒரு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது, மக்கள் கொண்டாடினார்கள். ஆனால், இந்த முறை தான் நீக்கப்பட்ட பிரதமருக்காக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். புதிய பாகிஸ்தான் இந்த கொள்ளைக்காரர்களை நம் மீது திணிப்பதன் மூலம் அமெரிக்கா பாகிஸ்தானை அவமதித்துள்ளது. சுல்பிகார் அலி பூட்டோ அமெரிக்காவால் சதி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இருக்கும் பாகிஸ்தான் 1970இல் இருக்கும் பாகிஸ்தான் இல்லை. இது புதிய பாகிஸ்தான். இந்தியாவும் இஸ்ரேலும் எனது வெளியேற்றத்தை மிகவும் கொண்டாடின. இதில் இருந்தே உங்களுக்கு உண்மை புரியும்” என்று அவர் தெரிவித்தார்.