மலையாள நடிகரும், முன்னாள் மக்களவை எம்பியுமான இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமான உயிரிழந்தார்.
மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட். பிரபல மலையாள நடிகரான இன்னொசன்ட் மார்ச் 3ந் தேதி உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது காரணமாக இதயம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் இன்னொசன்ட் 2012ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகள் அதற்கு தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு புற்றுநோயை முறியடித்து அதில் இருந்து மீண்டார். புற்றுநோயை தான் எதிர்கொண்டது குறித்து Laughter in the Cancer Ward என்ற புத்தகத்தை எழுதி புற்றுநோய்குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். மலையாள திரையுலகில் 5 சகாப்தங்களுக்கும் மேலாக நடித்துள்ள இன்னொசன்ட், 1979 ஆம் ஆண்டு இரிஞ்சாலக்குடா நகராட்சியின் கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சாலக்குடி மக்களவைத் தொகுதியிலிருந்து இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்னொசன்ட் தனது தனித்துவமான நடிப்பால் மக்களின் இதயங்களைக் கவர்ந்தார், மேலும், பொதுமக்களின் பல பிரச்சனைகளுக்காக போராடி உள்ளார் என்று திரு பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நடிகை குஷ்பு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஒரு சிறந்த நடிகரை இழந்துவிட்டோம். அவர் ஒரு ஜாம்பவான். இன்னொசென்ட் அவர்களின் மறைவால், விலைமதிப்பற்ற ரத்தினத்தை இழந்துவிட்டோம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.