‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப்பெரிய நஷ்டம்: விஜய் ஆண்டனி!

‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சசி இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது. இந்தப்படம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல வெற்றி பெற்ற ஹிட் ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக பல அதிரடியான ஆல்பம் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த இவர் தற்போது நடிகர், தயாரிப்பாளராக முத்திரை பதித்து வருகிறார். தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி தயாரிக்கவுள்ளதாக கடந்தாண்டு அறிவித்தார் விஜய் ஆண்டனி. இதன் முதல் பாகம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்துள்ள நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் மாங்காடு மூவிஸ் உரிமையாளர் ராஜ கணபதி என்பவர் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தயாரிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக்கூடம்’ படத்தின் கருவையும், வசனத்தையும் தனது அனுமதி இல்லாமல் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் தனக்கு நஷ்ட ஈடாக பத்து லட்சம் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விஜய் ஆண்டனி தரப்பிலிருந்து பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஆய்வுக்கூடம்’ படம் பற்றி எதுவும் தெரியாது. அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லை. இந்த வழக்கிற்கு பிறகு தான் படத்தை பார்த்தேன். பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்துக்கும் ‘ஆய்வுக்கூடம்’ படத்துக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படம் வெளியாவதை தடுக்கவே கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படம் வெளியாவது தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் வேதனை அடைந்தேன். ‘பிச்சைக்காரன் 2’ கதை கருவோடு 1944 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் மனுதாரர் இந்த கதையின் கருவை சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.