உலகம் ஓடிக்கொண்டிருக்கும் ரன்னிங் ரேசில் நான் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகை கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார்.
பிரபல நடிகையும், நடிகர் அசோக் செல்வனின் மனைவியுமான கீர்த்தி பாண்டியன் அண்மையில் வாவ் லைஃப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் தன்னுடைய வாழ்க்கை குறித்தான பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
உலகம் ஓடிக்கொண்டிருக்கும் ரன்னிங் ரேசில் நான் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை புரிய வைக்க முடியாது என்றும் நினைக்கிறேன். காரணம், அதை புரிய வைத்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு குறை சொல்வார்கள்; புரிய வைக்கவில்லை என்றாலும் குறை சொல்வார்கள். அதற்கு பதில் கொடுத்தாலும் பேசுவார்கள். பதில் கொடுக்கவில்லை என்றாலும் பேசுவார்கள். இங்கு சூழ்நிலை இப்படி இருக்கும் பொழுது, அவர்கள் பேசும் பேச்சுக்கு நாம் ஏன் பதில் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் அவர்களுக்கு நான் தனி கவனம் கொடுப்பதில்லை.
நான் செய்கிற வேலையை மிகவும் உண்மையாக நேசித்து செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அப்பாவாக அருண்பாண்டியனையும், கணவராக அசோக் செல்வனையும் பெற்றதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். காரணம் என்னவென்றால், சிறு வயதிலிருந்தே என்னுடைய அப்பா என்னை ஒரு பெண்ணாக மட்டும் அடையாளம் செய்யவில்லை. என்னையும் ஒரு தனிநபராக பார்த்தார். ஆகையால் உன்னால் இது மட்டுமே முடியும், இதெல்லாம் முடியாது என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது.
அதே மாதிரியான ஒரு சூழ்நிலையைதான் அசோக் செல்வன் தற்போது எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் தேர்ந்தெடுக்கும் கதைகள், கதாபாத்திரங்கள் என்னை சௌகரியமான நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று நினைப்பேன். காரணம் அப்படி ஒரு சௌகரியமான நிலைக்கு என்னை அந்த கதாபாத்திரம் எடுத்துச் சென்றால், அந்த கதாபாத்திரத்தை என்னால் முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்த முடியாது. இந்த பாடத்தை நான் தியேட்டரில் செய்த நாடகங்களின் வழியே கற்றுக் கொண்டேன்.
அந்த கதாபாத்திரம் என்னை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். அந்த சவாலை எதிர்கொண்டு, நான் அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். ஒரு வேளை அது தோல்வியில் முடியும் பொழுது, அது எனக்கு ஒரு பாடமாக அமையும். என் அப்பா அடிக்கடி சொல்வார். உன் தோல்வியில் இருந்து தான் நீ பாடங்களை கற்றுக் கொள்ள முடியுமே தவிர, வெற்றியில் இருந்து இல்லை என்று. இன்றும் நான் அதை தான் பின்பற்றுகிறேன்
என்னை பொருத்தவரை அழகு என்பது நீங்கள் உங்கள் உள்ளத்தில் என்னவாக இருக்கிறீர்கள் என்பதும், சக நபரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் உள்ளடக்கியது. அதுதான் அழகு. நீங்கள் என்னிடம் பேசும் பொழுது, பழகும் பொழுது, நான் நன்றாக உணரவில்லை என்றால் அதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.