சினிமா விழாவில் மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்!

சினிமா விழா மேடையில் திடீரென டென்ஷனான பார்த்திபன், தனது கையில் இருந்த மைக்கை கீழே வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் சினிமா இது தான் என சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ப்ரொமோஷனும் வேற லெவலில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ப்ரொமோஷன் சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.

மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பார்த்திபன் இருவரும் மாறி மாறி கேள்வி கேட்டு, சுவாரஸ்யமாக பதிலளித்து வந்தனர். கிட்டதட்ட 20 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வருகிறேன். வருடத்திற்கு ஒரு முறை அல்லது ஒரு வருடம் விட்டு அடுத்த வருடம் என பலமுறை சந்தித்து கதை கூறி உள்ளேன். என்ன காரணத்தினாலோ அது நிராகரிக்கப்பட்டது. ஏதோ பண்ண போறீங்க கடைசியாக இரவின் நிழல் படத்தின் கதையை சொன்னேன். ஓகே சொல்லி விட்டீர்கள். என்ன நினைத்து ஓகே சொன்னீர்கள் என பார்த்திபன், ரஹ்மானிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், எல்லோருக்கும் ஒரு கனவு, தீராத வேட்கை இருக்கும். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு அது கப்பலேறி போய் விடும். அதற்கு பிறகு கடமைக்காக பணியாற்றுவோம். ஆனால் உங்களிடம் எப்போதும் அந்த வேட்கை இருப்பதை நான் பார்த்தேன். ஏதோ பண்ண போகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் இந்த அளவிற்கு செய்வீர்கள் என நினைக்கவில்லை என்றார்.

இரவின் நிழல் படம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது பார்த்திபன் கையில் வைத்திருந்த மைக்கை திடீரென கீழே வீசி எறிந்து, டென்ஷனாக பேசினார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட கேள்வி பிடிக்காததால் தான் பார்த்திபன் கோபத்தில் மைக்கை வீசி எறிந்தார் என தகவல் பரவியது. இதனால் ரஹ்மான் அப்படி என்ன கேட்டார். எதற்காக இந்த அளவிற்கு பார்த்திபன் கோபப்பட்டார் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் உண்மையில் பார்த்திபன் கையில் வைத்திருந்த மைக், அவர் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென வேலை செய்யாமல் போனது. கீழே இருந்து ஒருவர் மைக் சரியாக உள்ளதா என டெஸ்ட் செய்யும்படி கேட்டுள்ளார். இதனால் கடுப்பான பார்த்திபன், மைக்கை கீழே வீசி எறிந்து, இதையெல்லாம் முன்னாடியே கேட்க மாட்டிங்களா என கோபமாக கத்தினார். மேடையில் அமர்ந்திருந்த ரஹ்மான் இதை பார்த்து ஷாக்காகி விட்டார்.

சிறிது நேரத்தில் சுதாரித்த பார்த்திபன், இப்படி தான் நடந்து கொண்டது அநாகரிகமானது தான் என சொல்லி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து வேறு மைக் வழங்கப்பட்டதால், தனது பேச்சை தொடர்ந்தார்.