ரூ.200 கோடி மோசடி வழக்கு..ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின் நீட்டிப்பு!

பண மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமினை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி தொழிலதிபர்களை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் சிறையில் உள்ளார். மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை இவர் வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நடிகை ஜாக்குலினிடம் பலமுறை விசாரணை நடத்தினர். அமலாக்கத் துறையினர் சமீபத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளியாக சேர்த்தனர்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கேட்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், நாங்கள் வாழ்க்கையில் ரூ.50 லட்சத்தை பார்த்தது கிடையாது. ஆனால், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.7.14 கோடி பணத்தை வீணாக செலவு செய்துள்ளார். அவரிடம் பணம் உள்ளதால், இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பார்க்கிறார். அவர் மீது தீவிரமான புகார்கள் இருந்தாலும் விசாரணைக்கு ஆஜராக மறுப்பதுடன், நாட்டை விட்டு தப்பிக்க பார்க்கிறார் என, வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், சுகேஷ் சந்திரசேகர் மீதான புகார்கள் குறித்து தெரியாது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன் என்றார். இதன் பிறகு நீதிபதி கூறுகையில், ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எதிராக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? மற்ற குற்றவாளிகள் சிறையில் உள்ளனர். ஆனால், அவரை பிடிக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு செவ்வாய் கிழமை வரை இடைக்கால ஜாமினை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.