திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி டுவீட்!

தமிழகத்துக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இன்றும் நாளையும் தென்னிந்திய மாநிலங்களில் பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் பெங்களூரில் 2-வது சர்வதேச முனையம், கெம்பே கவுடா சிலை திறப்பு, தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயில் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதன்பின்னர் பெங்களூரில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கம் அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி. அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அம்பாத்துரையில் இருந்து சாலை மார்க்கமாக காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி.

காந்தி கிராமம் செல்லும் வழியில் சாலையின் இருபக்கமும் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமர் மோடிக்கு பூமழை தூவி வாழ்த்தி உற்சாக வரவேற்பளித்தனர். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜாவுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கினார். அதேபோல் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக மதுரை சென்றடைந்தார். இதற்காக முன்னரே மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

திண்டுக்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தொடர்பாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தமிழில், வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். இதில் பிரதமர் மோடிக்கு அளிக்க வரவேற்பு படங்களும் பகிரப்பட்டுள்ளன.