விஜய் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து போலீஸ் நடவடிக்கை!

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‛வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் வந்த காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக அவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பனையூரில் ரசிகர்களை சந்தித்த பிறகு புறப்பட்ட விஜய்யின் காரை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர். அப்போது காரில் சென்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், விஜய் கார் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் உடனடியாக விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜயின் வாரிசு எந்த ஒரு சிக்கலுமின்றி தெலுங்கில் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் ரிலீசாகும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.