இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வென்ற பிரபல மூத்த இயக்குநர் கே. விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக விளங்கிய இயக்குநர் கே. விஸ்வநாத் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92. கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு குருவாகவே விளங்கிய கே. விஸ்வநாத் மறைந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 1930ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி பிறந்தவர் கே. விஸ்வநாத். 1965ம் ஆண்டு ஆத்ம கவுரவம் படத்தை இயக்கி தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திற்கே நந்தி விருது வென்று அசத்தினார். 1979ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான சங்கராபரணம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நிலையில், அந்த படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1979ம் ஆண்டு வெளியான சங்கராபரணம், 1981ம் ஆண்டு வெளியான சப்தபதி, 1985ம் ஆண்டு வெளியான ஸ்வதி முத்யம், 1989ம் ஆண்டு வெளியான சுட்ரதருலு மற்றும் 2004ம் ஆண்டு வெளியான ஸ்வராபிஷேகம் உள்ளிட்ட 5 படங்களுக்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார் கே. விஸ்வநாத். மேலும், ஸ்வதி முத்யம் படம் இந்திய அரசு சார்பாக 59வது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட பெருமையையும் பெற்றது. முதல் படம் தொடங்கி ஏகப்பட்ட முறை நந்தி விருதுகளை குவித்த இயக்குநர் கே. விஸ்வநாத் சர்வதேச அங்கீகாரங்களையும் இந்திய அரசின் உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசு சினிமாவில் பல ஆண்டுகள் சாதனை புரிந்த இயக்குநர் கே. விஸ்வநாத்தை கவுரவிக்கும் விதமாக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அளித்து பெருமைப்படுத்தியது.
1995ம் ஆண்டு தெலுங்கில் சுப சங்கல்பம் படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார் இயக்குநர் கே. விஸ்வநாத். அஜித்தின் முகவரி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காக்கை சிறகினிலே, பகவதி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஸ்வநாத் தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாம் பாதி முழுக்க இடம் பெற்று ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும், சியான் விக்ரம் உடன் இணைந்து ராஜபாட்டை படத்திலும் நடித்திருந்தார். சிங்கம் 2, லிங்கா, உத்தம வில்லன் மற்றும் சொல்லிவிடவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மிகப்பெரிய திரை ஆளுமையாக 50 ஆண்டுகள் கோலோச்சிய பிரபல இயக்குநர் கே. விஸ்வநாத்தின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் கே..விஸ்வநாத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார் ‘கலாதபஸ்வி’ விஸ்வநாத்; அவரது படைப்புகள், காலம் கடந்து கொண்டாடப்படும் வாழ்க அவரது கலை! உங்கள் தீவிர ரசிகன், கமல்ஹாசன் என்று தெரிவித்துள்ளார்.